நாகர்கோவிலில் ஆட்சிமொழி கருத்தரங்கம் அரசு ஊழியர்கள் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு


நாகர்கோவிலில் ஆட்சிமொழி கருத்தரங்கம் அரசு ஊழியர்கள் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் தமிழ் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த ஆட்சிமொழி கருத்தரங்கில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ் மொழியானது 4 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முந்தைய பழமையான மொழியாகும். உலக மொழிகளில் போற்றுதலுக்குரிய முதல் மொழி தமிழ் மொழியாகும். பிற மொழிகளை விட அதிக சொற்களும், பொருள்களும் அடங்கிய மொழி தமிழ் மொழி.

எனவே அரசு அலுவலர்களாகிய நாம் அன்றாடம் நமது பணிகளில் அதிக தமிழ் சொற்களை பயன்படுத்த வேண்டும். பணி நிமித்தமாக தமிழ் சொற்களை உபயோகிப்பது மட்டுமல்லாது நமது உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பேசும் போதும், கைப்பேசியில் குறுந்தகவல்கள் அனுப்பும் போதும் தமிழ் மொழியினை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் நமது அடுத்த தலைமுறையினருக்கும் தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை உணர செய்வதோடு, அதனை செயல்படுத்தவும் ஊக்குவிக்க முடியும்.

இலக்கண பிழையின்றி...

அதுபோன்று நாம் தமிழில் கடித வரைவுகள் மற்றும் கோப்புகளில் தமிழ்மொழியை பயன்படுத்தும்போது இலக்கண பிழையின்றி எழுத வேண்டும். நாம் எழுதியதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா? என்பதை நமக்கு தெரிந்த தமிழ் இலக்கணம் அறிந்தவர்களிடம் கேட்டு அவற்றை சரிசெய்து கொள்ளவேண்டும். இதன்மூலம் நமக்கு அதிகமாக தமிழ் இலக்கண குறிப்புகளை அறிந்துகொள்வதோடு வருங்காலங்களில் தமிழ் இலக்கண பிழையின்றி எழுத முடியும்.

பிற மொழிகளைவிட தமிழ்மொழியில் ஒரு வார்த்தைக்கு பல பொருள் உள்ளது. எனவே நாம் உபயோகப்படுத்தும் வார்த்தையை எதற்காக உபயோகபடுத்துகிறோமோ, அதற்குரிய பொருளை உணர்ந்து அந்த வார்த்தையினை பயன்படுத்த வேண்டும். மேலும் இங்கு தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் கோப்புகள் எழுதியவர்களுக்காக பரிசுகள் வழங்கப்பட்டது. இதை நினைக்கும்போது தமிழ் பேசும் நம் அனைவருக்கும் தமிழ் தெரியவில்லை என்று பொருள் கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே இனி வரும் காலங்களில் இதுபோன்று பரிசுகள் வழங்ககூடிய நிலை ஏற்படாத வண்ணம் நாம் அனைவரும் தமிழில் வரைவுகள் மற்றும் கோப்புகள் எழுத முழுதேர்ச்சி பெறவேண்டும்.

தமிழ்மொழி பயன்பாடு

இந்த கருத்தரங்கில் பங்கேற்று குறுகிய நேரத்தில் தமிழைப்பற்றி அறியவும், கருத்தரங்கில் பேச வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழ்மொழி நம்முடைய காலத்திற்கு பின்பும் நிலைத்து நிற்க, நாம் அனைவரும் எங்கும், எதிலும் தமிழ்மொழியை பயன்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த்்் வடநேரே பேசினார்.

பரிசு

முன்னதாக அனைத்துத் துறை அலுவலர்களுக்கான பயிலரங்கம் நடந்தது. தமிழில் சிறந்த வரைவுகள் மற்றும் குறிப்புகள் எழுதும் அரசு பணியாளர்களுக்கான பரிசு தொகையினை கலெக்டர் பிரசாந்த்்் வடநேரே வழங்கினார்.கருத்தரங்கில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் நவாஸ்கான் வரவேற்று பேசினார். செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்ட இயக்குனர் (பணி நிறைவு) செழியன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) ரெசினாள்மேரி, கிரேஸ் கல்வியியல் கல்லூரி முதல்வர் கமல செல்வராஐ், இந்துக்கல்லூரி தமிழ்துறை இணைப்பேராசிரியர் வேணுக்குமார், உதவி பேராசிரியர் மலர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story