சங்ககிரி அருகே போலீஸ் வாகனம் மீது கல்வீசிய லாரி டயர் திருட்டு கும்பல் சரக்கு வேனில் தப்பிச்சென்றதால் பரபரப்பு


சங்ககிரி அருகே போலீஸ் வாகனம் மீது கல்வீசிய லாரி டயர் திருட்டு கும்பல் சரக்கு வேனில் தப்பிச்சென்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 13 July 2019 10:15 PM GMT (Updated: 13 July 2019 8:16 PM GMT)

சங்ககிரி அருகே போலீஸ் வாகனம் மீது கல்வீசி விட்டு, சரக்கு வேனில் லாரி டயர் திருட்டு கும்பல் தப்பிச்சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சங்ககிரி, 

சங்ககிரி அருகே மாவெளிபாளையத்தில் தனியார் லாரிகள் விற்பனை நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான லாரிகள் பாடி கட்டுவதற்காக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணன், முருகன், சரவணன், பிரகாஷ் ஆகியோர் அந்த நிறுவனத்தில் காவல் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் லாரிகள் நிறுத்தும் குடோனில் இருந்து சத்தம் கேட்கவே காவலாளிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 4 மர்ம நபர்கள் பாடி கட்ட நிறுத்தி இருந்த லாரிகளில் இருந்து 10 டயர்களை கழற்றி அந்த குடோனுக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த சரக்கு வேன் ஒன்றில் தூக்கி போட்டு கொண்டு இருந்தனர்.

உடனே அவர்களை விரட்டி பிடிக்க காவலாளிகள் சென்ற போது அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் அந்த வேனில் தப்பிச்சென்று விட்டனர். இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் காவலாளிகள் கண்ணன், முருகன் ஆகியோர் அந்த சரக்கு வேனை துரத்தி சென்றனர்.

அதே நேரத்தில் அந்த சரக்குவேன் குறித்து கொண்டலாம்பட்டி தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கோவை தேசிய நெடுஞ்சாலையில் குப்பனூர் பைபாஸ் சாலையில் இருந்து அவர்களும் அந்த சரக்கு வேனை பிடிக்க தங்கள் ரோந்து வாகனத்தில் விரட்டி சென்றனர்.

இதனால் பீதிக்கு உள்ளான சரக்கு வேனில் சென்ற டயர் திருடும் கும்பல், வீராட்சிபாளையம் தனியார் கல்லூரி பைபாஸ் இணைப்பு சாலையில் சென்றது. அங்கு சாலை துண்டிக்கப்பட்டு இருந்ததால் அங்கிருந்து வேறு பாதையில் செல்ல வழிதெரியாமல் அந்த மர்ம நபர்கள் சரக்கு வேனுடன் நின்றனர்.

இதனிடையே அந்த வாகனத்தை பின்தொடர்ந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் அவர்களை விரட்டி பிடிக்க முயன்றனர். இதையடுத்து அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கு கிடந்த கற்களை எடுத்து ரோந்து வாகனம் மீது வீசினர். இதில் போலீஸ் வாகன முன்பக்க கண்ணாடி உடைந்தது. இருப்பினும் அதில் இருந்த டிரைவர் அருணாசலம், ரோந்துபடை போலீஸ் ஏட்டு முருகேசன் ஆகியோர் அந்த கும்பல் இருந்த சரக்கு வேனை நெருங்கி சென்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் அந்த சரக்கு வேனில் இருந்து 8 டயர்களை கீழே தள்ளிவிட்டு கற்களை வீசியபடியே அங்கிருந்து சரக்கு வேனில் தப்பிச்சென்றது. இது குறித்து அந்த லாரி நிறுவன மேலாளர் விவேக் சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டயர் திருட்டு கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த கும்பல் விட்டு சென்ற 8 டயர்களை மீட்டனர். திருட்டு போன 2 டயர்களின் மதிப்பு ரூ.65 ஆயிரம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story