துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: தஞ்சை-திருச்சி மின்சார ரெயில் சேவை ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வருகிறது


துணை மின்நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரம்: தஞ்சை-திருச்சி மின்சார ரெயில் சேவை ஒரு வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வருகிறது
x
தினத்தந்தி 14 July 2019 4:30 AM IST (Updated: 14 July 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை-திருச்சி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்னும் 1 வாரத்திற்குள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. இதற்காக தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்,

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியில் தான் தஞ்சை பெரியகோவில், கல்லணை, அரண்மனை, தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில், திருவாரூர் தியாகராஜர் கோவில், நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி, நாகூர் தர்கா போன்ற புண்ணிய தலங்களும் உள்ளன.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் முன்பு தஞ்சை வழியான வழித்தடம் தான் முக்கியமானதாக இருந்து வந்தது. பின்னர் நாளடைவில் விழுப்புரம்-திருச்சி இடையேயான வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டதையடுத்து தஞ்சை வழியாக இயக்கப்பட்ட பெரும்பாலான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

தற்போது இந்த வழித்தடத்தில் 15-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தஞ்சை-திருச்சி இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதையடுத்து திருச்சி-காரைக்கால் இடையே தஞ்சை, திருவாரூர், நாகை வழியாக மின் மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருச்சியில் இருந்து தஞ்சை வரை ஒரு கட்டமாகவும், தஞ்சையில் இருந்து காரைக்கால் வரை ஒரு கட்டமாகவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக தஞ்சை, திருவாரூர், காரைக்கால் ஆகிய இடங்களில் துணை மின் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் மொத்த தூரம் 153 கி.மீ. ஆகும். இதில் தஞ்சை-திருச்சி இடையே 50 கிலோ மீட்டர் தூரம் முதல் கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முடிவடைந்து விட்டது. இந்த வழித்தடத்தில் இரட்டை ரெயில்பாதை என்பதால் இருவழியிலும் மின்வழிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 2,900 மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளன.

முதலில் திருச்சி பொன்மலையில் இருந்து ஆலக்குடி வரையும், பின்னர் ஆலக்குடியில் இருந்து தஞ்சை வரையும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தஞ்சை-திருச்சி இடையே பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி தஞ்சை-திருச்சி இடையே மின்சார ரெயில் சோதனை முறையில் இயக்கப்பட்டது.

தஞ்சை துணை மின் நிலையம் பயன்பாட்டுக்கு வராததால் திருச்சி பொன்மலையில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் எடுக்கப்பட்டு ரெயில் சோதனை முறையில் இயக்கி பார்க்கப்பட்டது. இந்த ரெயில் தஞ்சையில் இருந்து 35 நிமிடத்தில் திருச்சி சென்றது.

அதன் பின்னர் சோதனை ஓட்டம் நடைபெற்ற 20 நாளில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோதனை ஓட்டம் முடிந்து 4 மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் மின்சார ரெயில் இயக்கப்படவில்லை.

தற்போது தஞ்சையில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்த பணிகளும் விரைவில் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து தஞ்சை-திருச்சி இடையே மின்சார ரெயில் சேவை 1 வாரத்திற்குள் இயக்கப்படும் என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story