கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ராம.கோபாலன் தலைமையில் நடைபெற்றது


கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி  இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் ராம.கோபாலன் தலைமையில் நடைபெற்றது
x
தினத்தந்தி 15 July 2019 4:00 AM IST (Updated: 14 July 2019 10:31 PM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்யக்கோரி, சென்னையில் இந்து முன்னணி அமைப்பினர் ராம.கோபாலன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

கோவிலில் சாமி தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் தலைமை தாங்கினார்.

சென்னை மாநகர பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். சிறுவர்கள் பலர் சாமி வேடம் அணிந்து பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் சொத்துகளை அரசு மீட்டுத்தர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். அப்போது ராம.கோபாலன் பேசியதாவது:-

கோவில்களில் பக்தர்கள் கடவுளை தரிசிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணம் அவ்வப்போது உயர்த்தப்பட்டு வருகிறது. கடவுளை காட்சி பொருளாக்கி தரிசன கட்டணம் வசூலித்து பொருளாதார தீண்டாமை போக்கு கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த தரிசன கட்டணத்தை வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்யவில்லை என்றால், அடுத்தகட்டமாக அறவழியில் கோவில்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

கோவில்களில் கடவுளுக்கு சாத்தப்படும் புடவைகள் மற்றும் துணிகளை ஏலம் விட்டு சம்பாதிக்காமல் ஏழை எளிய மக்களுக்கு பிரசாதமாக வழங்கவேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துகளை மீட்டு எடுக்கவும், அதை பராமரித்திடவும் தனித்து இயங்கும் வாரியம் அமைத்திட வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துகளை முறையாக பராமரித்து பயன்படுத்தினால் அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை வருமானம் பெறமுடியும். இதன் மூலம் ஏழை இந்துகளுக்கு உதவி செய்து அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story