திருமுல்லைவாயலில் மத்திய அரசு நிறுவன என்ஜினீயர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை


திருமுல்லைவாயலில் மத்திய அரசு நிறுவன என்ஜினீயர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 15 July 2019 3:15 AM IST (Updated: 14 July 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு நிறுவன உதவி என்ஜினீயர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 80 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

ஆவடி,

ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் கமலம் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55). இவர், பெங்களூருவில் உள்ள மத்திய பாதுகாப்பு துறையின்கீழ் இயங்கும் பி.இ.எம்.எல். நிறுவனத்தில் உதவி என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியலட்சுமி (48). இவர்களுக்கு சரண்யா (26) என்ற மகளும், பாலாஜி (24) என்ற மகனும் உள்ளனர்.

சரண்யா, அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். பாலாஜி, பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சனி, ஞாயிறு விடுமுறையில் பெங்களூருவில் இருந்து வீட்டுக்கு வந்த தட்சிணாமூர்த்தி, நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு துணி எடுக்க சென்னை தியாகராயநகர் சென்றார். இரவு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அறை முழுவதும் சிதறிக்கிடந்தது.

பீரோவை சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 80 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து தட்சிணாமூர்த்தி அளித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

சம்பவ இடத்தில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து சென்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் ஜான்சி வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை நடத்த வீட்டுக்கு அருகே கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் கொள்ளையர்களை உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

கொள்ளை நடத்த வீட்டுக்கு அருகே குறைந்த அளவு வீடுகளே உள்ளன. சுற்றிலும் ஏராளமான மரங்கள் உள்ளதால் தோப்பு போல் காட்சி அளிக்கிறது. இதைபயன்படுத்தி, தட்சிணாமூர்த்தி குடும்பத்துடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள், கைவரிசையை காட்டி உள்ளனர்.

ஆவடி சரக போலீஸ் உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story