கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் முன்னாள் வீரர்


கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக உருவாக்கும் முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 14 July 2019 10:30 PM GMT (Updated: 14 July 2019 6:42 PM GMT)

கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக முன்னாள் வீரர் உருவாக்கி வருகிறார்.

கீரமங்கலம்,

கீரமங்கலம் அடுத்த செரியலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). முன்னாள் கைப்பந்து வீரரான இவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தினாலும் தனது உயரம் குறைவு என்ற ஒரு காரணத்தால் அரசு வேலைவாய்ப்புகளை பறிகொடுத்த நிலையில் தன்னால் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று களமிறங்கி பலரை உருவாக்கி உள்ளார். தனது சொந்த தென்னந்தோப்பை அழித்து மைதானம் அமைத்து 20 கிராம மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார். அவர்களுக்கான உடை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சொந்த செலவில் செய்து வருகிறார். தற்போது 300 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவரின் இந்த முயற்சியால் பலர் தேசிய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டில் சாதித்து வருகிறார்கள். பலர் அரசு வேலைக்கும் சென்றுள்ளனர்.

இதுகுறித்து சிவக்குமார் கூறுகையில், நான் செரியலூர் தொடக்கப்பள்ளியில் படித்த பிறகு 6-ம் வகுப்பு கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அப்போது இருந்த உடற்பயிற்சி ஆசிரியர் எனக்கு கைப்பந்து பயிற்சி கொடுத்தார். சில நாளில் சிறுவர்களுக்கான மாநில விளையாட்டு வீரர்கள் தேர்வு சென்னையில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நானும், மற்றொரு மாணவியும் மட்டுமே சென்றோம். அந்த ஊரில் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் சாலையை கடந்து சென்றால் அடிபடுவோம் என்று சாப்பிடாமல் மைதானத்திலேயே இருந்தேன். அப்போது அங்கே கிடந்த பந்தை எடுத்து சுவற்றில் அடித்துக் கொண்டே இருந்தேன். இதை கவனித்த தேர்வாளர்கள் இறுதியாக என்னை அழைத்து 12-வது ஆளாக மாநில வீரராக தேர்வு செய்தனர். பின்னர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் படித்த பிறகு கல்லூரியில் எல்லாவற்றிலும் சாதித்தேன். வேலைக்காக செல்லும் போது முதலில் விளையாட சொல்வார்கள் அதில் வெற்றி பெறுவேன். ஆனால் உயரம் குறைவு என்று காரணம் சொல்லி தட்டிக்கழித்தார்கள். இப்படியே வேலை தேடி பார்த்த பிறகு ஊர் ஊராக சென்று விளையாட தொடங்கினேன். அதில் கிடைத்த பரிசு தொகைகளை சேமித்து வைத்தேன். பின்னர் அதை வைத்து விளையாட்டு உபகரணங்கள் வாங்கினேன்.

இந்த நிலையில் தான் நாம் விளையாட்டு வீரனாக இருந்தும் அரசு வேலை கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் நம்மால் முடிந்த அளவுக்கு கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். வீடு வீடாக சென்று சிறுவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்க தொடங்கினேன். படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. அதாவது 300 மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு என்ன திறன் இருக்கு என்பதை அறிந்து கைப்பந்து, கால்பந்து, ஓட்டப்பந்தயம், பளு தூக்குதல் இப்படி தரம் பிரித்து பயிற்சி கொடுத்து வருகிறேன். தற்போது என்னிடம் பயிற்சி பெற்ற சிலர் விளையாட்டு இடஒதுக்கீட்டில் அரசு வேலைக்கு சென்றுவிட்டார்கள் என்றார்.

Next Story