வறட்சியில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேருக்கு நேரடி நீர் பாசன முறை கலெக்டர் தொடங்கி வைத்தார்


வறட்சியில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேருக்கு நேரடி நீர் பாசன முறை கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 14 July 2019 11:00 PM GMT (Updated: 14 July 2019 7:33 PM GMT)

வறட்சியில் இருந்து தென்னை மரங்களை பாதுகாக்க வேருக்கு நேரடி நீர்பாசன செயல்முறையை கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குறைவான மழை பெய்ததால் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. பல்லாண்டு பயிர்களான தென்னை, பாக்கு, மா, கொய்யா மற்றும் இதர பழ மரங்களின் வளர்ச்சி குன்றி மகசூல் இழப்பு ஏற்படுகின்ற நிலை உள்ளது. இந்த சூழ்நிலையில் நீர் மேலாண்மையின் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் கோவிந்தராஜ் என்ற விவசாயியின் வயலில் தென்னையில் நேரடியாக வேருக்கு நீரை கொண்டு சென்று நுண்ணூட்டமிடும் பாசன முறை குறித்த செயல்விளக்க முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கி தொடங்கி வைத்து செயல்முறை குறித்து விளக்கினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வறட்சியால் நீர் பற்றாக்குறை காரணமாக தென்னை மற்றும் பிற பழ மரங்களை புத்துயிரூட்டும் தொழில்நுட்பமாக நீரை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில் நேரடியாக வேருக்கு நீர் பாசனத்துடன் நுண்ணூட்டமிடுதல் மூலம் தென்னை மரங்களை பாதுகாக்கலாம். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் வளர்ந்த மரங்களுக்கு மட்டுமில்லாமல் புதிய கன்றுகளுக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

பண்ணை குட்டை

தென்னை மரங்களை வறட்சியில் இருந்து பாதுகாக்கும் ஒரு முயற்சியாக நேரடியாக வேருக்கு நீர்பாசனம் செய்யும் முறையை விவசாயிகளின் வயல்களில் செயல்படுத்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் மூலம் குழிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விவசாய நிலங்களில் மழை நீரை சேமிக்க சமஉயர வரம்பு அமைத்தல், பண்ணை குட்டை அமைத்தல், மரக்கன்று நடவு செய்ய குழி எடுத்தல் போன்ற பணிகளுக்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் கைலாசபதி, உதவி இயக்குனர் தேன்மொழி, வேளாண்மை அலுவலர்கள் இளங்கோவன், அதிபதி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், களப்பணியாளர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story