இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது தா.பாண்டியன் பேச்சு


இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கும் ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது தா.பாண்டியன் பேச்சு
x
தினத்தந்தி 15 July 2019 4:30 AM IST (Updated: 15 July 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கின்ற ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது என தா.பாண்டியன் கூறினார்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசியல் விளக்க பொதுக்கூட்டம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் எஸ்.பி.கேசவன் தலைமை தாங்கினார். துணைச்செயலாளர் மணி, பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய செயலாளர் அர்த்தனாரி, ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு உறுப்பினர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் தேசியக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான தா.பாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

மத்தியில் பா.ஜனதா கட்சி தனிக்கட்சியாக வெற்றி பெறவில்லை. சிவசேனா உள்ளிட்ட கட்சிகளோடு, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து மத அமைப்புகளின் ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. கடவுளின் பெயரால் மனிதர்களை பிரித்து இவன் உயர்ந்தவன், இவன் தாழ்ந்தவன் என்ற நிலையை கற்பிக்கும் வர்ணாசிரம கொள்கைகளை நாடெங்கிலும் திணிக்கின்ற செயலை மத்தியில் ஆளும் மோடி அரசு செய்து கொண்டிருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் மதவாத சக்தியை முறியடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்காததால் மாபெரும் தோல்வியை சந்தித்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைத்து மாபெரும் கூட்டணி அமைத்து வெற்றி கண்டார். தமிழகத்தை ஆளுகின்ற அ.தி.மு.க. முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கொள்கையிலிருந்து விலகி மத்திய ஆட்சியாளர்களின் சொல்படி இயங்குகின்ற ஒரு அதிகாரம் இல்லாத ஆட்சியாளராக மாறிவிட்டனர். ஆனால் இந்திய நாட்டின் இறையாண்மையை காக்கின்ற ஜனநாயக சக்தியாக தமிழகம் திகழ்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் மணிவேல், மாவட்ட செயலாளர் குழந்தான், ஈரோடு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வக்கீல் மோகன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் முத்துசாமி, ராமகிருஷ்ணன், கிருஷ்ணசாமி, தம்பிராஜா, செல்வராஜ், செங்கோட்டையன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக கணேஷ்குமார் வரவேற்றார். முடிவில் ஏ.ஐ.டி.யு.சி. விசைத்தறி தொழிற்சங்க தலைவர் மணிவேலன் நன்றி கூறினார்.

Next Story