ஆத்தூர் அருகே முட்டல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்


ஆத்தூர் அருகே முட்டல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 14 July 2019 9:00 PM GMT)

ஆத்தூர் அருகே முட்டல் அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

ஆத்தூர்,

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் கிராமத்தில் வடக்கு பகுதியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் ஆணைவாரி ஏரி உள்ளது. ஏரியில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் முட்டல் அருவி அமைந்துள்ளது. பருவமழை பொய்த்து போனதால் அருவியில் தண்ணீர் இன்றி வறண்டு பாறைகளாக காட்சியளித்தது.

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் முட்டல் அருவியில் தண்ணீர் விழ தொடங்கியது. இந்த தகவல் சுற்றுலா பயணிகளுக்கு தெரியவந்தது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், அருவியில் அதிக தண்ணீர் விழுவதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகள் அருவியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்

இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், அருவியில் தற்போது தண்ணீர் அதிக அளவில் விழுவதால் குளிப்பதற்கு இதமாக இருந்ததாகவும் சேலம் மாவட்டத்தில் சிறந்த சுற்றுலா இடமாக முட்டல் அருவி மாறி வருகிறது என்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நலன்கருதி வனத்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தற்போது ஆத்தூர் பகுதிகளில் தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் முட்டல் அருவியில் தண்ணீர் அதிகளவில் விழுகிறது. இதனால் வரும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story