தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும், கூடுதல் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் உண்ணாவிரதம்


தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும், கூடுதல் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 14 July 2019 10:45 PM GMT (Updated: 15 July 2019 12:06 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்பினர் சார்பில், தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் புதிய பஸ்நிலையம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு நிறுவனர் கிரு‌‌ஷ்ணன், மாநில தலைவர் சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்திய ஊழல் ஒழிப்போர் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் செல்வராஜ், அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிர்வாகி பிரபாகரன், சட்ட விழிப்புணர்வு மற்றும் ஊழல் ஒழிப்பு அமைப்பின் மாநில இணை செயலாளர் அசோக்குமார், மாநில பொது செயலாளர் விவேகானந்தன், மாவட்ட செயலாளர் அம்ஜத்கான், போராட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்கும் 25 சதவீதம் ஏழை, எளிய நலிவடைந்த பிரிவை சேர்ந்த மாணவர்களிடம் இருந்து கல்வி கட்டணம் மற்றும் பல்வேறு விதமான கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு கல்வி பயில வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே கல்வியை தொடர முடியாத மாணவர்களுக்கு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் படிக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்.

சட்டவிரோதமாக செயல்படும் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளை மூடும் போது, அந்த பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.. காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலையில் முடிவடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story