கோவில் திருப்பணி செய்வதில் மோதல், இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை - அரியநாச்சி கிராமத்தில் போலீஸ் குவிப்பு


கோவில் திருப்பணி செய்வதில் மோதல், இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை - அரியநாச்சி கிராமத்தில் போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 15 July 2019 4:15 AM IST (Updated: 15 July 2019 5:36 AM IST)
t-max-icont-min-icon

கோவில் திருப்பணி செய்வதில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் இருதரப்பினரிடையே நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் அரியநாச்சி கிராமத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

திட்டக்குடி, 

வேப்பூர் அருகே அரியநாச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் கட்டிடங்கள் சேதமடைந்து இருப்பதால், ஒரு தரப்பினர் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் கிராமத்தில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு ஒன்றும் நடந்து வருகிறது.

தற்போது கோவிலில் உள்ள சாமி சிலையை சிலர் திருடி சென்றுவிட்டதாக கூறி, ஒரு தரப்பினர் 2 நாட்களுக்கு முன்பு வேப்பூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதை தொடர்ந்து மற்றொரு தரப்பினர் நேற்று முன்தினம் வேப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. தொடர்ந்து அரியநாச்சி கிராமத்தில் பதற்றம் நீடித்து வருவதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அங்கு நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், இருதரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தை திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு தாசில்தார் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், துணை தாசில்தார்கள் ஜெயச்சந்திரன், ராமர், வருவாய் ஆய்வாளர் விஜயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வரி எதுவும் வசூலிக்காமல், நன்கொடை மூலமே கோவில் திருப்பணியை மேற்கொள்வது என்று வலியுறுத்தப்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தங்களது குடும்பத்தினர் வெளிநாட்டில் அதிகமாக வசித்து வருகிறார்கள். அவர்களிடமும் இது தொடர்பாக கருத்துககளை கேட்டு, முடிவை தெரிவிப்பதாக தெரிவித்தனர். இதற்கு 3 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வருகிற 17-ந்தேதி(நாளை மறுநாள்) மீண்டும் தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெறும், அதில் இருதரப்பினரும் கலந்து கொண்டு சுமூக தீர்வுகாண முன்வர வேண்டும் என்று தாசில்தார் ரவிச்சந்திரன் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். நேற்று நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு எதுவும் எட்டப்படாததால், கிராமத்தில் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story