15-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி நீல நிற பட்டாடையில் அத்திவரதர் இளையராஜா தரிசனம்


15-வது நாளாக பக்தர்களுக்கு காட்சி நீல நிற பட்டாடையில் அத்திவரதர் இளையராஜா தரிசனம்
x
தினத்தந்தி 16 July 2019 4:45 AM IST (Updated: 15 July 2019 11:50 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் 15-வது நாளான நேற்று நீல நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இசையமைப்பாளர் இளையராஜா, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில், அத்திவரதர் ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதையொட்டி நேற்று 15-வது நாளாக அத்திவரதர் ராமர் நீல நிற பட்டாடை உடுத்தி, வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அப்போது, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் உலகத்தில் இருந்து வந்த பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். நேற்று பிற்பகல் 1 மணி வரை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

அடிப்படை தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை பக்தர்களுக்கு முறையாக செய்து கொடுக்கப்படாமல் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் மயக்கம் அடைந்து வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று பக்தர்களும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா உள்பட திரளானோர் அத்திவரதரை தரிசித்தனர். அவர்களுக்கு அர்ச்சகர்கள் துளசி மாலை, பிரசாதங்களை வழங்கினார்கள்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் உத்தரவின் பேரில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவிலை சுற்றி ஆங்காங்கே இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஏற்படும் அசவுகரியத்தால் மயக்கம், இதய பிரச்சினை, சுவாச கோளாறு போன்ற உடல்நிலை குறைவு ஏற்பட்டால் இந்த முகாமில் அவரச உதவி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story