வங்கி கடனை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு மடிக்கணினி கேட்டு மாணவர்களும் வந்தனர்
வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் மடிக்கணினி வழங்கக்கோரி பள்ளி மாணவர்களும் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் சாந்தா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் வந்து கலெக்டர் சாந்தாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி 2017-18, 2018-19-ம் கல்வி ஆண்டுகளில் பிளஸ்-2 பயின்ற எங்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தங்களுக்கு மடிக்கணினிகள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதேபோல் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் செல்வகுமார் தலைமையில், அச்சங்கத்தினர் கொடுத்த மனுவில், தமிழக அரசின் கறிக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற்று கோழிப்பண்ணை அமைத்து கறிக்கோழிகளை வளர்க்கும் தொழில் செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த தொழிலுக்கு மத்திய அரசு அளிக்கும் மானியம் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் நிறுவனம் முறையாக கோழிக்குஞ்சுகள் வழங்காததால், தற்போது பண்ணைகளில் கோழிகள் இல்லாததால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களை கடனை கட்டக்கோரி வங்கிகள் நெருக்கடி கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும். இல்லையென்றால் எங்களுடைய வங்கிக்கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குன்னம் தாலுகா கைப்பெரம்பலூர் ஊர் பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கு கடந்த 2014-ம் ஆண்டு சிதம்பரம் தொகுதி எம்.பி. நிதியில் இருந்து ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு சமுதாயக்கூடம் கட்டும் பணி பாதி முடிக்கப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்திற்காக முதல் ரசீது வாங்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2017-ல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் இறுதி தொகைக்கான ரசீதினை கொடுக்க மறுத்து வருகிறார். இதனால் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், திறப்பு விழா காணாமல் உள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 265 மனுக்களை கலெக்டர் சாந்தா பெற்றுக்கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள், மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு கலெக்டர் அலுவலர்களை அறிவுறுத்தினார். மேலும் தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அரசுப்பள்ளியில் பயின்று அறிவுக்கூர்மையான அமைப்பு சாரா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அந்தந்தப்பகுதியில் சிறந்து விளங்கும் தனியார் பள்ளியில் கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவ- மாணவிகளுக்கு, தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயிக்கப்படும் கட்டணமான விடுதிக் கட்டணம் ரூ.15 ஆயிரமும், பராமரிப்புக் கட்டணமாக ரூ.5 ஆயிரமும் பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
மேலும் 2016-ம் ஆண்டு படைவீரர் கொடி நாளை முன்னிட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ரூ.3 லட்சம் 35 ஆயிரம் வசூல் செய்யப்பட்டமைக்காக, தலைமைச் செயலாளரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்திடம் கலெக்டர் சாந்தா வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர் முகமது யூசுப், முன்னாள் படை வீரர் நல அமைப்பாளர் சடையன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story