சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறுவன் கடத்தல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் சிறுவன் கடத்தல் கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 July 2019 10:30 PM GMT (Updated: 15 July 2019 6:53 PM GMT)

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெற்றோருடன் இருந்த சிறுவன் கடத்தப்பட்டான். இதையடுத்து கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட மாநகரங்களுக்கு பல்வேறு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்கின்றனர். இதனால் எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒடிசா மாநிலம் நவுரங்க்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராம் சிங்(வயது 25) என்பவர் தனது மனைவி நீலாவதி (23) மற்றும் மகன் சோம்நாத்துடன் (3) ஒடிசா செல்வதற்காக எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்தார். ரெயில் அதிகாலை என்பதால் தனது குடும்பத்தினருடன் ராம் சிங் ரெயில் நிலையத்திலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இந்த நிலையில் நள்ளிரவில் நீலாவதி எழுந்து பார்த்தபோது சிறுவன் சோம்நாத்தை காணவில்லை. அவர் தனது கணவர் ராம் சிங்கை எழுப்பி இதுகுறித்து கூறியுள்ளார். பின்னர் இருவரும் ரெயில் நிலையம் முழுவதும் சிறுவனை தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. இதையடுத்து சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசாரிடம் சிறுவனை காணவில்லை என ராம் சிங் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தமிழக ரெயில்வே ஐ.ஜி. வனிதா உத்தரவின் அடிப்படையில், சென்டிரல் ரெயில்வே சூப்பிரண்டு முருகன் மற்றும் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாசன் தலைமையிலான போலீசார் சிறுவன் சோம்நாத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

சிறுவன் சோம்நாத் காணவில்லை என புகார் அளித்ததும் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். அப்போது சிறுவனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றது தெரியவந்தது. அந்த நபர் பூங்கா ரெயில் நிலையம் நோக்கி சென்றதால் சென்னை கடற்கரை-தாம்பரம் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலைய கண்காணிப்பு கேமராவின் பதிவை பார்த்தோம். அப்போது அந்த அடையாளம் தெரியாத நபர் சிறுவன் சோம்நாத்துடன் மின்சார ரெயிலில் இருந்து தாம்பரம் ரெயில் நிலையத்தில் இறங்கி வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். சென்டிரல் ரெயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபரால் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story