தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் விரைவில் போராட்டம்
தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து அகில இந்திய அளவில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் கூறினார்.
திருச்சி,
தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் (எஸ்.ஆர்.இ.எஸ்.) திருச்சி, மதுரை, சேலம் கோட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி கோட்ட செயலாளர் அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சங்க பொதுச்செயலாளரும், ரெயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் இணை பொதுச்செயலாளருமான சூரியமூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். நிர்வாக தலைவர் பாலகிருஷ்ணன், கோட்ட தலைவர் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் கஜானா, பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 28 மற்றும் 29-ந்தேதிகளில் நடைபெற உள்ள ரெயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் வெற்றி பெற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டம் முடிந்த பின்னர் பொதுச்செயலாளர் சூரிய மூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியன் ரெயில்வேயில் மொத்தம் 20 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் 2 கோடியே 30 லட்சம் மக்கள் ரெயில் பயணத்தை மேற்கொள்கிறார்கள். ஆண்டுக்கு 1,250 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியன் ரெயில்வே மக்கள் சேவையில் 4-வது இடத்தில் உள்ளது. இதனை தனியார்மயமாக்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அவர் 2014-ம் ஆண்டு முதலில் பதவிக்கு வந்ததும் எடுத்த முயற்சிகளை தோல்வியடைய செய்தோம்.
இப்போது இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்னர் எடுக்க கூடிய முயற்சிகளையும் முறியடிக்க அகில இந்திய அளவில் ரெயில்வே தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்த இருக்கிறோம். ரெயில்வே தனியார்மயமாக்கப்பட்டால் ரெயில் கட்டணம் தற்போது உள்ளதை விட பல மடங்கு அதிகரித்து விடும். பாதுகாப்பான ரெயில்பயணத்தை தனியார் முதலாளிகளால் வழங்க முடியாது.
ஏற்கனவே துப்புரவு பணி, கேட்டரிங் போன்றவை தனியார்மயமாக்கப்பட்டு தோல்வியை தழுவி உள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த 100 நாள் செயல் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும், 30 வருடம் சர்வீஸ் அல்லது 55 வயது நிறைவடைந்த தொழிலாளர்களை கட்டாய ஓய்வில் அனுப்பும் திட்டத்தை கைவிடவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடரவேண்டும் என்ற கோரிக்கைகளுக்காக தான் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளிடமும் வாக்கெடுப்பு நடத்தி போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story