திருவள்ளூர் அருகே முட்புதரில் 4 வயது சிறுமி உடலில் காயங்களுடன் பிணமாக மீட்பு போலீசார் தீவிர விசாரணை
திருவள்ளூரில் காணாமல் போன 4 வயது வட மாநில சிறுமி முட்புதரில் உடலில் காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கொத்தியம்பாக்கம் பகுதியில் சத்தியநாராயணன் என்பவருக்கு சொந்தமான சிமெண்டு செங்கல் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் தங்களது 4 வயது பெண் சிறுமியுடன் தங்கி கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுமி அந்த தொழிற்சாலையில் வழக்கமாக விளையாடிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று காலை அந்த தொழிற்சாலை அருகே உள்ள சுற்றுச்சுவர் அருகில் முட்புதரில் காணாமல் போன சிறுமி முகத்தில் காயங்களுடன் பிணமாக கிடப்பதை கண்டு உடன் பணி புரியும் தொழிலாளர்கள் அவரது தந்தைக்கு தகவல் கொடுத்தனர்.
இதையறிந்த உடன் பதறிப்போய் சம்பவ இடத்திற்கு ஓடிவந்த அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இறந்து கிடந்த சிறுமியின் உடலை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த சிறுமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவரை யாரேனும் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 4 வயது சிறுமி முட்புதரில் காயங்களுடன் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story