நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்துக்கொன்று தொழிலாளி தற்கொலை திருவாரூர் அருகே பரிதாபம்


நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்துக்கொன்று தொழிலாளி தற்கொலை திருவாரூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 15 July 2019 10:00 PM GMT (Updated: 15 July 2019 7:38 PM GMT)

திருவாரூர் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை எரித்துக்கொன்று தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கொரடாச்சேரி, 

திருவாரூர் அருகே உள்ள கண்கொடுத்தவனிதம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 45). இவருடைய மனைவி அமராவதி(40). இவர்களுக்கு நிதிஷ்வரன்(13) என்ற மகனும், நிதிஸ்ரீ(11) என்ற மகளும் உள்ளனர். செந்தில் குமார், கூலி தொழிலாளி ஆவார். அவர் சமீபத்தில் கேரளாவுக்கு சென்று கூலி வேலை செய்து வந்தார்.

அப்போது அவர் மதம் மாறி தனது பெயரையும் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த செந்தில்குமாருக்கு தனது மனைவி அமராவதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் நேற்று கணவன்- மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், தனது மனைவி அமராவதி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு ஓடி விட்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதில் வெப்பம் தாங்க முடியாமல் அமராவதி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது அமராவதி உடல் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அமராவதி பரிதாபமாக இறந்தார்.

அமராவதி இறந்த தகவல் அறிந்த செந்தில்குமார், போலீசாருக்கு பயந்து வீட்டுக்கு அருகே உள்ள வேப்பமரத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தொழிலாளி ஒருவர் மனைவியை எரித்துக்கொன்று தற்கொலை செய்து கொண்ட இந்த விபரீத சம்பவம் அப்பகுதி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 

Next Story