குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 16 July 2019 4:30 AM IST (Updated: 16 July 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகேயுள்ள கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஏத்தக்கோவில் கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு அரப்படித்தேவன்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ஏத்தக்கோவில் கிராமத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்டிருந்த மின்மோட்டார் பழுதடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏத்தக்கோவில் கிராமத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாக ஆத்திரமடைந்த ஏத்தக்கோவில் கிராம பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காலிக்குடங்களை தலையில் வைத்தப்படி, தண்ணீர் வழங்க கோரி கோ‌‌ஷமிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஒன்றிய அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் குடிநீர் பிரச்சினையை விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story