ஆண்டிப்பட்டி அருகே, வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது - குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ஆண்டிப்பட்டி அருகேயுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மதுரை மாநகரின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக மதுரை மாநகருக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தேனி அல்லிநகரம் நகராட்சி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளுக்கும் வைகை அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் போதுமான அளவு மழை பெய்யாத காரணத்தால் வைகை அணைக்கு நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது. வைகை அணை நீர்மட்டம் குறையும்போது, கைகொடுக்கும் முல்லைப்பெரியாறு அணையும் போதுமான மழை இல்லாமல் நீர்வரத்து இல்லை. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. அந்த அணையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு குடிநீர் வினியோகத்திற்கு தண்ணீரை சில நாட்களுக்கு மட்டும் தான் திறக்க முடியும். மறுபுறம் நீர்வரத்து இல்லாத வைகை அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 27.99 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர்இருப்பு 295 மில்லியன் கனஅடியாக இருந்தது. அணையில் தற்போது இருப்பு உள்ள தண்ணீரை கொண்டு அடுத்து வரும் 50 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடியும் நிலை உருவாகியுள்ளது. அதிலும் வைகை அணையில் 15 அடி வரையில் வண்டல் மண் படிந்துள்ளதால், இருப்பில் உள்ள தண்ணீரின் அளவு மேலும் குறையும் என்று கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்த்த தென்மேற்கு பருவமழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், வைகை அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் மதுரை மாநகர், தேனி அல்லிநகரம் நகராட்சி, ஆண்டிப்பட்டி பேரூராட்சி, சேடப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம், பெரியகுளம் நகராட்சி ஆகியவற்றில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இனிவரும் நாட்களிலாவது மழை பெய்து நீர்வரத்து ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story