கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம், கிராம மக்கள் வலியுறுத்தல்


கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம், கிராம மக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 16 July 2019 4:15 AM IST (Updated: 16 July 2019 5:04 AM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்குள் செல்ல அனுமதிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்

திண்டுக்கல்,

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வேலு உள்பட பலர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை கொடுத்தனர்.

அதன்படி நிலக்கோட்டை தாலுகா பிள்ளையார்நத்தம் கிராமத்தை சேர்ந்த மக்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், நிலக்கோட்டை தாலுகா மாலைப்பட்டியில் தங்கள் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த பல ஆண்டுகளாக எங்கள் சமூகத்தை சேர்ந்த மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கோவிலில் கடந்த ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

அப்போது திருவிழாவுக்காக வரியை நாங்கள் செலுத்தினோம். ஆனால் திருவிழாவின் போது எங்களை கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் எங்கள் சமூகத்தை இழிவுபடுத்தும்விதமாக பேசினர். மேலும் திருவிழாவின் போது கோவில் நிர்வாகம் சார்பில் எங்கள் சமூகத்தினருக்கு கிடைக்கவேண்டிய வழக்கமான மரியாதை கூட கிடைக்கவில்லை.

எனவே கோவில் தற்காலிக நிர்வாகிகளாக எங்கள் சமூகத்தை சேர்ந்த இருவரை நியமிக்க வேண்டும். இல்லையென்றால் கோவிலில் நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார். அதில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விவசாய மருந்து விற்பனை கடைகளில் பயோ மருந்து என்ற பெயரில் சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகளை இங்கு கொண்டு வந்து சிலர் விற்பனை செய்கின்றனர். இந்த மருந்துகளை பயன்படுத்தி சாகுபடி செய்யப்படும் நெல், காய்கறிகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படும். எனவே தடை செய்யப்பட்ட பயோ மருந்துகளை விற்பனை செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல் பழனியை அடுத்த பாலசமுத்திரம் அருகே உள்ள குறும்பபட்டி 14-வது வார்டை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு அளித்தனர். அதில், எங்கள் பகுதியில் குடிநீர், கழிப்பறை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்துகொடுக்கப்படவில்லை. இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

இதற்கிடையே திண்டுக்கல்லை அடுத்த குட்டத்துப்பட்டி, காலாட்டுப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங் களுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். பின்னர் பொதுமக்களில் சிலர் மட்டும் சென்று தங்கள் பிரச்சினை குறித்து மனு அளிக்கும்படி தெரிவித்தனர். அதன்படி பொதுமக்களில் சிலர் மட்டும் கலெக்டர் விஜயலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தார். இதுகுறித்து காலாட்டுப்பட்டி பொதுமக்கள் கூறுகையில், குடிநீர் பிரச்சினை குறித்து கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம். இதன் பின்னரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி விசா பெறுவதற்காக ரூ.85 ஆயிரம் வரை வாங்கி பணத்தை மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Next Story