வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தி.மு.க.- காங்கிரசால்தான் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வரவில்லை - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு


வளர்ச்சிக்கு எதிரானவர்கள், தி.மு.க.- காங்கிரசால்தான் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வரவில்லை - தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2019 10:45 PM GMT (Updated: 16 July 2019 12:14 AM GMT)

வளர்ச்சியை எதிர்க்கும் தி.மு.க., காங்கிரசால் தான் மத்திய அரசின் நவோதயா பள்ளி தமிழகத்தில் வராமல் போய்விட்டது என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். விருதுநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

விருதுநகர்,

பெருந்தலைவர் காமராஜர் இருந்து இருந்தால் மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை பாராட்டி இருப்பார் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஊழலுக்கு எதிரானவர் பெருந்தலைவர் காமராஜர். அதே போன்று பிரதமர் மோடியும் ஊழலற்ற ஆட்சியை நடத்தி கொண்டு இருக்கிறார்.

தி.மு.க.வும், காங்கிரசும் வளர்ச்சிக்கு எதிரானவர்கள். அதனால் தான் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வராமல் போய்விட்டன. அண்டை மாநிலமான கேரளாவில் நவோதயா பள்ளிகள் மூலம் அம்மாநில மாணவ, மாணவிகள் படித்து பயன் பெற்றுள்ளனர். நவோதயா பள்ளி என்ற பெயரை வைத்துக்கொண்டு இந்தி திணிப்புக்கு முயற்சி என்று கூறுவது தவறான பிரசாரம் ஆகும்.

புதிய கல்விக் கொள்கை பற்றி ஆராய 10 பேர் குழுவை அமைத்துள்ளதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அப்படி ஆனால் இதுவரை புதிய கல்விக் கொள்கை பற்றி எதுவும் தெரியாமல் தான் விமர்சனம் செய்து வந்தாரா? உதயசூரியன் சின்னத்தை வைத்துள்ளவர்கள் தான் புதிய கல்விக் கொள்கையை பற்றி தெரியாமல் பேசுகிறார்கள் என்றால், நடிகர் சூர்யாவும் புதிய கல்வி கொள்கை பற்றி முழு விவரம் தெரியாமல் தான் கருத்து தெரிவித்துள்ளார்.

தபால்துறை தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டுள்ளது. தமிழில் நடத்தப்பட வில்லை என கூறுகிறார்கள். பொது மொழியான ஆங்கிலத்தில் நடத்தப்படுகிறது. அடுத்து தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் நடத்தியதால் தமிழகத்தில் தபால் துறையில் உள்ள காலிபணியிடங்கள் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பறிபோய்விடாது. தமிழகத்தில் உள்ளவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. பெரியாரை பற்றி பேசுபவர்கள் ஓட்டு கிடைக்க வேண்டும் என்பதற்காக கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்து பெரியார் பெயரை நீக்கி விட்டனர். இந்தியை எதிர்ப்பதாக கூறுபவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படும் நிலை இருந்து தான் வருகிறது. மக்களை ஏமாற்றுவதற்காக தவறான பிரசாரம் செய்கின்றனர். பெருந்தலைவர் காமராஜர் கட்டி உள்ள மணிமுத்தாறு அணைப்பகுதியில் உள்ள அவரது நினைவு சின்னம் சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

Next Story