மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 16 July 2019 10:30 PM GMT (Updated: 16 July 2019 7:04 PM GMT)

மயிலாடுதுறை அருகே அட்டகுளம் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் உள்ள கீழத்தெரு மற்றும் வ.உ.சி. தெருவில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த 2 தெருக்களுக்கு செல்லும் சாலை, அங்கு உள்ள அட்டகுளத்தின் கரையையொட்டி அமைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது சேதமடைந்து மண்சாலையாகவே மாறிவிட்டது. மேலையூர் வாய்க்காலில் இருந்து அட்டகுளத்திற்கு தண்ணீர், இந்த சாலையில் உள்ள சிறு பாலத்தின் வழியாக தான் செல்லும். இந்த பாலம் குழாய் பதிக்கப்பட்டு சிறுபாலமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பாலத்தின் உள்ளே உள்ள குழாய் உடைந்து, அதன் ஒரு பகுதி உள்வாங்கி விட்டது. இதனால் சாலையின் ஒரு பகுதியும் பள்ளமானதோடு, வாய்க்காலில் இருந்து குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையும் அடைக்கப்பட்டு விட்டது. இதன் காரணமாக கடந்த ஆண்டு அட்டகுளத்திற்கு தண்ணீர் நிரப்ப இயலாமல் போனது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது.

நடவடிக்கை

மேலும், இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்வோர் சிலர், பாலம் உடைந்து ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து விபத்திலும் சிக்கி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், மேற்கண்ட இடத்தில் உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைத்து, புதிய தார்சாலை அமைத்து தரும்படி மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை விடுத்தும், தற்போதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

எனவே, காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு அட்டகுளம் பாலத்தை புதிதாக கட்டி, அங்குள்ள சாலையையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story