‘அ.தி.மு.க. அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ டி.டி.வி. தினகரன் பேட்டி


‘அ.தி.மு.க. அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ டி.டி.வி. தினகரன் பேட்டி
x
தினத்தந்தி 17 July 2019 4:00 AM IST (Updated: 17 July 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

‘அ.தி.மு.க. அரசு தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

சேலம்,

சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

‘நீட்‘ தேர்வு தொடர்பாக தமிழக அரசின் மசோதாவை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே திருப்பி அனுப்பி விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு வேண்டாம் என்று ஒட்டுமொத்த மாணவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் மத்திய அரசுடன் சுமுக உறவு வைத்திருப்பதாக கூறும் இந்த அரசால் அதற்கு விலக்கு பெற்று தரமுடியவில்லை.

சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளை பாதிக்கிற வகையில் 8 வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி சேலத்தில் நடந்த கூட்டத்தில் கூறினார். அப்போது எதுவும் பேசாத முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிப்போம் என்று சொல்கிறார். இதற்கிடையில் இந்த திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று தொடர்ந்து அவர் எதற்காக கூறி வருகிறார் என்று தெரியவில்லை.

9 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க.வினர் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. தோல்வி பயம் காரணமாகவே உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை. இனிமேல், மழை, புயல் என காரணம் காட்டி சட்டமன்ற தேர்தல் வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலத்தை கடத்தி விடுவார்கள். அ.ம.மு.க. வலுவாக உள்ளது. சிலர் சுயவிருப்பம் காரணமாகவே கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர். இதனால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தொண்டர்களால் இயக்கப்படும் இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. சசிகலாவை முன்கூட்டியே சிறையில் இருந்து வெளியே அழைத்து வர சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது விபரீத ராஜயோகம். இந்த உறுப்பினர்களால் தமிழகத்துக்கு எந்த பலனும் கிடையாது. விரைவில் அவர்களுடைய உண்மையான நிலைப்பாடு தெரியவரும்.

மேம்பாலம் கட்டுவதன் மூலம் தான் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. தமிழகத்தில் அனைத்து துறைகளும் மோசமாக உள்ளன. எங்கள் கட்சியை ‘லெட்டர்‘ பேடு கட்சி என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் எங்களுடைய கட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். அடுத்த மாத இறுதிக்குள் கட்சியை பதிவு செய்து விடுவோம். ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு சின்னம் இருந்தால் வெற்றி பெறுவது சிரமம். இதனால் தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்பதால் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாங்கள் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story