பொன்னமராவதி, திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


பொன்னமராவதி, திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 16 July 2019 10:30 PM GMT (Updated: 16 July 2019 7:59 PM GMT)

பொன்னமராவதி, திருவரங்குளம், கந்தர்வகோட்டையில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பொன்னமராவதி,

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொன்னமராவதி முத்தமிழ்ப்பாசறை இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய விழா, காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார். தமிழாசிரியர் சுதா வரவேற்றார். பாசறையின் தலைவர் சந்திரன் தமிழ்மொழியின் சிறப்புக்குறித்தும், காமராஜரின் அரிய செயற்பாடுகள் குறித்தும் விளக்கி பேசினார். அதைத்தொடர்ந்து மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில், வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பாசறையின் மேனாள் தலைவர் மாணிக்கவேலு, 10, 12-ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளுக்கு ரொக்க பரிசும், ஆறாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆங்கில அகராதியும் வழங்கினார். இதில் ஆசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பூமிதேவி நன்றி கூறினார்.

திருவரங்குளம்

திருவரங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜா கண்ணு தலைமை தாங்கினார். பள்ளி தலைமையாசிரியர் முருகையன் வரவேற்றார். தொடர்ந்து மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி அதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கருப்பையா, முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஐயாத்துரை மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.

பகல் நேரபாதுகாப்பு மையத்தில்

பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், வட்டார கல்வி அலுவலகத்திலும், வட்டார வள மையத்திலும் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயிலும் பகல் நேர பாதுகாப்பு மையத்தில் மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலையில் கல்வி வளர்ச்சி நாள் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. விழாவில் காமராஜரின் பிறப்பு, சிறுவயதிலேயே நாட்டின் முன்னேற்றத்திற்காக போராடியது, முதல்-அமைச்சராக இருந்தபோது அவர் மாணவர் நலனுக்காக கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள், எளிமையான வாழ்க்கை முறை ஆகியவை சார்ந்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இதில் ஆசிரியர் பயிற்றுனர் அழகுராஜா, புவனேஸ்வரி, உடல் இயக்க நிபுணர் தங்கவேல், சிறப்பாசிரியர் ரபேல்நான்சிபிரியா, பகல்நேரப் பாதுகாப்பு மைய ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள்விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து கந்தர்வகோட்டை ஒன்றியம், வேலாடிப்பட்டி, வெள்ளாளவிடுதி, சுந்தம்பட்டி, கொல்லம்பட்டி, நெப்புகை, அண்டனூர் அரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மாணவ- மாணவிகளுக்கு இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, மாறு வேடப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடாசலம் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

இதேபோல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

Next Story