கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து சுற்றுலா பயணிகள் அவதி


கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து சுற்றுலா பயணிகள் அவதி
x
தினத்தந்தி 16 July 2019 11:00 PM GMT (Updated: 16 July 2019 8:23 PM GMT)

கன்னியாகுமரியில் பேரூராட்சி குப்பை கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் சூரியன் மறையும் காட்சியை காணச் சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் அவதி அடைந்தனர்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி பகுதியில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த குப்பை கிடங்கில் நேற்று மாலை 4 மணிக்கு திடீரென தீப்பற்றியது. அப்போது, அந்த பகுதியில் கடற்கரை காற்று பலமாக வீசியதால் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

சுற்றுலா பயணிகள் அவதி

இதனால், கடற்கரை பகுதி மற்றும் கன்னியாகுமரி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த நிலையில் சன்செட் பாயிண்ட் கடற்கரையில் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

புகை மூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதால் பெரும் அவதியடைந்தனர். இதனால், சூரியன் மறையும் காட்சியை காண முடியாமல் அவர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்த பயங்கர தீ விபத்து பற்றி கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது கன்னியாகுமரி நிலைய அலுவலர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையிலான வீரர்கள் நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தகவல் அறிந்ததும், அவர்கள் கன்னியாகுமரிக்கு விரைந்து சென்று குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Next Story