தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் 13-வது கட்ட விசாரணை


தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: ஒரு நபர் ஆணையம் 13-வது கட்ட விசாரணை
x
தினத்தந்தி 17 July 2019 3:30 AM IST (Updated: 17 July 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் நேற்று 13-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்த விசாரணை அதிகாரி பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறார். ஏற்கனவே 12 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, 355 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில் விசாரணை அதிகாரி அருணாஜெகதீசன் தலைமையில் 13-வது கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதில் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, மொத்தம் 24 அமைப்புகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.

இதில் நேற்று மட்டும் ஆஜராகுமாறு 5 அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் மட்டும் ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து வருகிற 19-ந் தேதி வரை விசாரணை நடக்கிறது.

Next Story