பந்தலூர் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயற்சி


பந்தலூர் அருகே, ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை தாக்க முயற்சி
x
தினத்தந்தி 16 July 2019 9:45 PM GMT (Updated: 16 July 2019 8:27 PM GMT)

பந்தலூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அரசு அதிகாரிகளை சிலர் தாக்க முயன்றனர்.

பந்தலூர்,

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பஜாரில் இருந்து கூவமூலா வழியாக அத்திமாநகர், அத்திக்குன்னு, உப்பட்டி, தேவாலா உள்பட பல்வேறு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை தனியார் எஸ்டேட் வழியாக செல்கிறது. அந்த சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கம்பியை வைத்து பல ஆண்டுகளாக தோட்ட நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இந்த நிலையில் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பு கம்பியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கடந்த கிராம சபை கூட்டத்திலும் மனுக்கள் அளிக் கப்பட்டன. இது குறித்து வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்தனர்.

அங்கு அரசு ஆவணங்களை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் அந்த சாலை எஸ்டேட் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும், அது நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலை என்பதும் தெரிய வந்தது. இதையொட்டி நேற்று மதியம் வருவாய் ஆய்வாளர் காமு, கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கூடலூர் நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள் நிர்மலா, இப்ராகீம் ஆகியோர் சாலையின் குறுக்கே உள்ள இரும்பு தடுப்பு கம்பியை அகற்ற முயன்றனர்.

இதை அறிந்த தோட்ட நிர்வாக அலுவலர்கள், ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரும்பு தடுப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வருவாய் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினரிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில்இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அங்கு பாதுகாப்புக்கு போலீசார் யாரும் இல்லாததால், வருவாய் துறையினர் இரும்பு தடுப்பு கம்பியை அகற்றாமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், உயர் அதிகாரிகளிடம் உரிய ஆலோசனை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Next Story