வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


வேப்பனப்பள்ளி அருகே பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 17 July 2019 4:30 AM IST (Updated: 17 July 2019 2:15 AM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க கோரி பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குப்பச்சிபாறை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 173 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஆசிரியர்கள் பள்ளிக்கு சரிவர வருவது இல்லை என புகார் கூறப்பட்டது.

இதனால் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் 2 ஆசிரியர்கள் மட்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கிறது. பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து விட்டனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் அங்குள்ள கோவிலில் அமர்ந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து குரும்பரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வரை பள்ளிக்கு செல்லமாட்டோம் என்று மாணவர்கள் தெரிவித்தனர். இதேபோல் ஆசிரியர்கள் நியமிக்கும் வரை தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story