கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி, மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் 30-ந்தேதி குற்றச்சாட்டு பதிவு
கொடைக்கானல் மலையில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டது தொடர்பாக மாவோயிஸ்டுகள் மீதான வழக்கில் 30-ந்தேதி கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வடகவுஞ்சி மலைப்பகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் பதுங்கி இருந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டனர். அப்போது சிறப்பு அதிரடிப்படை போலீசார், அவர்களை சுற்றி வளைத்து துப்பாக்கிசூடு நடத்தினர். இதில் நவீன்பிரசாத் என்ற மாவோயிஸ்டு இறந்து விட, 7 பேர் தப்பிவிட்டனர்.
இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தப்பியோடிய மாவோயிஸ்டுகளான ரஞ்சித், நீலமேகம், கண்ணன், காளிதாஸ், பகத்சிங், செண்பகவல்லி, ரீனாஜாய்ஸ்மேரி ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் ரஞ்சித், நீலமேகம் ஆகியோர் ஜாமீனில் சென்று விட்டனர். மீதமுள்ள 5 பேரும் வெவ்வேறு சிறைகளில் உள்ளனர்.
இந்த நிலையில் கொடைக்கானல் மலையில் மாவோயிஸ்டுகள் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கு நேற்று, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி கோர்ட்டு வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அப்போது சிறையில் இருக்கும் 5 மாவோயிஸ்டுகளும் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேபோல் ஜாமீனில் இருக்கும் ரஞ்சித், நீலமேகம் ஆகியோரும் ஆஜராகினர். அப்போது விடுபட்ட குற்றப்பத்திரிகை நகல்கள் மாவோயிஸ்டுகளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக வழக்கின் விசாரணையை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜமுனா உத்தரவிட்டார். அதோடு அன்றைய தினம் 7 பேரும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இதனால் மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.
Related Tags :
Next Story