பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 July 2019 11:00 PM GMT (Updated: 17 July 2019 6:58 PM GMT)

மணல்மேடு அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர்கள் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர்.

மணல்மேடு,

மணல்மேடு அருகே தலைஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. இந்த ஆலையில் 2019-20-ம் ஆண்டு கரும்பு அரவையை உடனே தொடங்க கோரியும், ஆலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 12 மாத நிலுவை ஊதியத்தை வழங்க கோரியும் ஆலையின் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் உடன்பாடு ஏற்படாததால் அறிவித்தப்படி நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று மணல்மேடு அருகே தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் டி.எஸ்.குமார் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. தேர்தல் பணிக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான குத்தாலம் கல்யாணம் கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தின்போது, ஆலை ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். ஆலைக்கு நிரந்தர மேலாண்மை இயக்குனரை நியமிக்க வேண்டும். நடப்பு ஆண்டு கரும்பு அரவையை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் கமலநாதன், மோகன், ஜெயபால் மற்றும் கரும்பு விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story