புதிய கட்டிடத்துக்கு செல்ல மறுப்பு: ஸ்ரீரங்கம் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்


புதிய கட்டிடத்துக்கு செல்ல மறுப்பு: ஸ்ரீரங்கம் அருகே அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மறியல்
x
தினத்தந்தி 17 July 2019 11:15 PM GMT (Updated: 17 July 2019 7:27 PM GMT)

ஸ்ரீரங்கம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியின் புதிய கட்டிடத்துக்கு செல்ல மறுப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் மேலூரில் அய்யனார் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி, கடந்த 5 வருடத்திற்கு முன் தான் நடுநிலைப்பள்ளியாக இருந்து உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 110 மாணவ, மாணவிகளும், 6 முதல் 10-ம் வகுப்பு வரை 208 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.

இந்த உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடம் மேலூர் பகுதியில் கட்டப்படாமல் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் சுமார் ரூ.1 கோடியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த புதிய பள்ளியில் தான் 6 முதல் 10-ம் வகுப்பு வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் இங்கிருந்து அங்கு மாணவ-மாணவிகள் சென்றுவர முடியாது என்றும், போக்குவரத்து வசதி மற்றும் போதிய பாதுகாப்பு இருக்காது என்றும் கருதிய பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பமாட்டோம் என பலகட்ட போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து திருச்சி கலெக்டர் எஸ்.சிவராசு உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் மேலூர் அய்யனார் பள்ளியில் மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மேலூரிலேயே பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் பிள்ளைகளை மூலத்தோப்பு பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என உறுதியாக தெரிவித்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை 6 முதல் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை மூலத்தோப்பு பள்ளிக்கு செல்லுமாறு பள்ளி தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. ஆனால், மாணவ-மாணவிகள் புதிய கட்டிடத்துக்கு செல்ல மறுத்து பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டம் பகல் 12 மணிவரை நீடித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், மாவட்ட கல்வி அதிகாரி சின்னராசு ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம், பேச்சுவார்த்தைக்கும் வர மாட்டோம் என்றனர்.

இதைத்தொடர்ந்து அங்கு வந்த ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், தாசில்தார் கனகமாணிக்கம் ஆகியோர் பெற்றோரிடம் உங்கள் பிள்ளைகளை மூலத்தோப்பு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம். இங்கேயே படிக்க வையுங்கள். உங்கள் கோரிக்கைகளை மனுவாக எழுதி தாருங்கள். இன்று(வியாழக்கிழமை) மாலை ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் கல்வி அதிகாரிகள், போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம் என தெரிவித்தனர். அதன்பேரில் மறியலை தற்காலிகமாக கைவிடுவதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story