தொழிலாளி வீட்டில் நகை, பணம் எடுத்துச் சென்றதாக புகார், பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்கு - தேனி கோர்ட்டு உத்தரவு
தொழிலாளி வீட்டில் நகை, பணத்தை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக, பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய தேனி கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.
தேனி,
தேனி அல்லிநகரம் வெங்கலாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 62). கூலித்தொழிலாளி. இவர், தேனியை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார் மூலமாக, தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
எனக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நான் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த போது, போலீசார் என்று கூறிக் கொண்டு 4 ஆண்களும், ஒரு பெண்ணும் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். வீட்டில் இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். எனது மனைவி அணிந்து இருந்த நகைகள் மற்றும் பீரோவில் இருந்த ரூ.4 ஆயிரத்து 100, தனியார் வங்கியில் நகை அடகு வைத்த ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். பின்னர் அருகில் உள்ள எனது மகள் பூங்கொடி வீட்டுக்கு சென்று நகைகள் அடகு வைத்த ரசீது ஆகியவற்றை எடுத்துக் கொண்டனர். விவரம் கேட்டபோது தென்கரை போலீஸ் நிலையம் வாருங்கள் என்று கூறிச் சென்றனர்.
இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையம் சென்று விசாரித்த போது, வீட்டுக்கு வந்தவர்கள் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் 3 போலீசார் என்பது தெரியவந்தது. நகை, ரசீது போன்றவற்றை சட்டவிரோதமாக தவறாக கைப்பற்றி சென்றுள்ளனர். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் அளித்தும், நகை, பணம், ரசீது திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. எனவே, இந்த மனுவை உரிய போலீஸ் துறைக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவின் மீது மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார். பின்னர், அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தபடி பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணையை அறிக்கையை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 22-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அல்லிநகரம் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story