குடிமராமத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 20,552 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்


குடிமராமத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி: கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 20,552 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்
x
தினத்தந்தி 18 July 2019 11:00 PM GMT (Updated: 18 July 2019 7:37 PM GMT)

குடிமராமத்தின் கீழ் வாய்க்கால்கள் தூர்வாரும் பணியால் கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் 20,552 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என கலெக்டர் அன்பழகன் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டத்திற்குட்பட்ட மாயனூர், மகாதான புரம், மயிலாடி மற்றும் பொய்யாமணி ஆகிய பகுதிகளில் கட்டளை மேட்டு வாய்க் காலில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாய சங்கங்களின் பங்களிப்புடன் ரூ.1½ கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் தூர் வாரும் பணிகளை மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரத்தில் கட்டளை மேட்டு வாய்க்காலில் குடி மராமத்து பணிகள் கடந்த 7-ந்தேதி போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாயனூர், மகாதானபுரம், மயிலாடி மற்றும் பொய்யாமணி ஆகிய பகுதிகளிலும் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.

மாயனூர் கிராமத்தில் காவிரியின் குறுக்கே கதவணை அமைந்துள்ளது. இக்கதவணையின் உதவியால் தென்கரை கால்வாய், கிருஷ்ணராயபுரம் வாய்க்கால், புதுக்கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் கட்டளை மேட்டுவாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் பயன்பெற்று வருகின்றது. இக்கதவணையில் வரும் நீரின் மூலம் கரூர், திருச்சி, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதி பயன்பெற்று வருகின்றது.

தூர்வாரப்பட உள்ளது

மேலும் கட்டளை மேட்டுவாய்க்கால் மற்றும் அதன் கிளைவாய்க்கால்களுக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் 5 பணிகளையும், புதுக்கட்டளை மேட்டுவாய்க்காலை தூர்வார ரூ.80 லட்சம் மதிப்பில் 3 பணிகளையும் குடி மராமத்து செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கட்டளை மேட்டு வாய்க்காலில் 22.20 கிலோ மீட்டரும், புதுகட்டளை மேட்டு வாய்க்காலில் 24 கிலோ மீட்டரும், பள்ளவாய்க்கால், படுகைவாய்க்கால், சித்தலவாய் வாய்க்கால் மற்றும் மகாதானபுரம் வாய்க்கால் முழுவதுமாக தூர்வாரப்படவுள்ளளது. இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதன் மூலம் மழைக்காலங்களில் நீர் வரும்பொழுது, சுமார் 20,552 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் எம்.லியாகத், காவிரி வடிநிலக்கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் கார்த்தி, கொளஞ்சிநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

தரகம்பட்டி

தரகம்பட்டி அருகே கீழச்சக்கரக்கோட்டையில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் நீர் மேலாண்மையை பெருக்க கடவூர் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்கள் சார்பாக தூர்வாரும் பணி தொடங்கியது. இந்த பணியை மாவட்ட திட்ட உதவி இயக்குனர் உமா சங்கர் தொடங்கி வைத்தார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கனகராஜ், பரமேஸ்வரன், ஒன்றியப் பொறியாளர் தியாகராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story