சொத்து தகராறில் சித்தப்பா மகனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு


சொத்து தகராறில் சித்தப்பா மகனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 19 July 2019 3:15 AM IST (Updated: 19 July 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

சொத்து தகராறில் சித்தப்பா மகனை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

மும்பை மேக்வாடி பகுதியில் வசித்து வந்தவர் அப்துல் சாத்தார். அதே பகுதியில் இவரது அண்ணன் குடும்பத்தினர் வசித்து வந்தனர். இதில் அவர்களுக்குள் சொத்து தகராறு ஏற்பட்டது. 1998-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி அப்துல் சாத்தாரின் அண்ணன் மனைவி இமாம்பி, மகன்கள் முகமது கசம் மற்றும் செரிப் கானுடன் அப்துல் சாத்தார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவர்களுக்குள் சொத்து பிரச்சினை தொடர்பாக சண்டை ஏற்பட்டது. இதில், இமாம்பி, 2 மகன்களுடன் சேர்ந்து அப்துல் சாத்தாரை தாக்கினார். பெரியம்மா மற்றும் அவரது மகன்கள் தந்தையை தாக்குவதை அப்துல் சாத்தாரின் மகன் நூர் தடுத்தார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் நூரை வாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் இமாம்பி மற்றும் அவரது மகன்களை கைது செய்தனர். இதில் இமாம்பி மற்றும் செரிப்கானுக்கு 2009-ம் ஆண்டு நீதிமன்றம் ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியிருந்தது.

முன்னதாக 2006-ம் ஆண்டு ஜாமீனில் சென்று தலைமறைவான முகமது கசம் 2012-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு விசாரணை தனியாக மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, சொத்து தகராறில் சித்தப்பா மகனை கொலை செய்த முகமது கசமுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Next Story