சக்கம்பட்டியில், குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா? -வீடுகளில் வரையப்பட்ட குறியீடுகளால் பரபரப்பு
சக்கம்பட்டியில் உள்ள சில வீடுகளில் வித்தியாசமான குறியீடுகள் வரையப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் கடத்தும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி, ஆஞ்ச நேயர் கோவில் பகுதியில் ஒரு வீட்டில் சில வித்தியாசமான குறியீடுகள் வரையப்பட்டு இருந்தது. இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குழந்தைகளை கடத்தும் கும்பல் அல்லது கொள்ளை கும்பல் இந்த அடையாள குறியீட்டை வரைந்து இருக்கலாம் என்று அவர் போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து அங்கு ஆண்டிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் மற்றும் போலீசார் வந்து வீட்டில் வரைந்த குறியீடுகளை பார்வையிட்டனர்.
இதுதவிர மேலும் 2 வீடுகளில் அம்புக்குறி மற்றும் பொம்மை போன்ற உருவம் வரையப்பட்டு இருந்தது. இது மர்மநபர்கள் வரைந்த குறியீடா அல்லது சிறுவர்கள் வரைந்ததா? என்று தெரியவில்லை. அதன்பின்னர் அந்த குறியீடுகளை போலீசார் அழித்துவிட்டு, வீட்டின் உரிமையாளரிடம் கண்காணிப்பு கேமரா பொருத்தும்படி அறிவுறுத்தினர். மேலும் பகல் இரவு நேரங்களில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதால் அச்சமடைய தேவையில்லை என்று கூறினர்.
பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டராமன் தனது செல்போன் எண் மற்றும் ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தின் எண்ணை அந்த பகுதி மக்களிடம் கொடுத்து, எந்த பிரச்சினை என்றாலும் உடனடியாக தகவல் கொடுக்கும்படி அறிவுறுத்தினார். அப்போது குழந்தைகளை கடத்துவதற்காகதான் வீடுகளில் குறியீடு வரையப்பட்டுள்ளது என கூறி அச்சமடைந்த பொதுமக்கள், குற்றச்செயல்கள் நடக்காதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். வீடுகளில் குறியீடு வரையப்பட்ட சம்பவம் சக்கம்பட்டி பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story