பெரியகுளம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் ஆங்கிலத்தில் உரையாடினார்


பெரியகுளம் அருகே, அரசு நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு - மாணவ-மாணவிகளுடன் ஆங்கிலத்தில் உரையாடினார்
x
தினத்தந்தி 19 July 2019 3:45 AM IST (Updated: 19 July 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்து அவர்களுடன் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார்.

தேனி,

பெரியகுளம் அருகே ஏ.மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று திடீர் ஆய்வு செய்தார். தலைமை ஆசிரியர் அறைக்கு சென்று வருகை பதிவேடு, மாணவ, மாணவிகள் சேர்க்கை விவரம் ஆகியவற்றை பார்வையிட்டார். பின்னர் ஆசிரியர்களிடம் அரசு பள்ளியில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு மேற்கொண்ட நடவடிக்கைகள், அதன் மூலம் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது ஆசிரியர்கள் கோடை கால விடுமுறையில் ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கைகளை தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதாகவும், தனியார் பள்ளிகளில் இருந்தும் பெற்றோர் தங்களின் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் கலெக்டர், வகுப்பறைக்கு சென்று மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க வைத்தும், புத்தகத்தில் இருந்து கேள்விகள் கேட்டும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவ, மாணவிகள் பலரும் ஆங்கிலத்தில் பாடப்புத்தகத்தை சரளமாக வாசித்தனர். மேலும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் ஆங்கிலத்தில் கலந்துரையாடினார். அப்போது மாணவ, மாணவிகளும் கலெக்டர் கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்தனர்.

இதையடுத்து சத்துணவு சமையல் அறைக்கு சென்று உணவின் தரம், உணவுப் பொருட்களின் இருப்பு விவரங்களை ஆய்வு செய்தார். ஆய்வைத் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
1 More update

Next Story