பழனி அருகே, மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
பழனி அருகே மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெய்க்காரப்பட்டி,
பழனி அருகே உள்ள தாளையூத்து கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தாளையூத்து மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 2017-18, 2018-19 ஆகிய கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று தாளையூத்து மேல்நிலைப்பள்ளியில் மேற்கண்ட கல்வியாண்டில் படித்த மாணவ-மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோர் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வலியுறுத்தி தாளையூத்து பஸ்நிறுத்தம் அருகே பழனி-உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது தங்களுக்கும் தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் மறியல் போராட்டத்தால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சையது பாபு மற்றும் சாமிநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதேபோல் பள்ளி தலைமை ஆசிரியை அருள்ஜோதியும் அங்கு வந்தார். பின்னர் அவர்கள் மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் அனைவருக்கும் இலவச மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். மாணவ-மாணவிகளின் இந்த திடீர் சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story