ரூ.87½ கோடியில் 5,148 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் - கலெக்டர் தகவல்


ரூ.87½ கோடியில் 5,148 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 19 July 2019 10:15 PM GMT (Updated: 19 July 2019 8:29 PM GMT)

தேனி மாவட்டத்தில் 5,148 பயனாளிகளுக்கு ரூ.87½ கோடியில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி,

தமிழக அரசின் உத்தரவின்படி, முதல்-அமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஏழை, எளிய குடும்பங்களுக்கு 300 சதுர அடி பரப்பளவில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த பசுமை வீடானது, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் சூரிய மின்சக்தியுடன் கூடிய மின் வசதி, தாழ்வாரம் ஆகிய வசதிகளுடனும், மழை சேகரிப்பு அமைப்புடனும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கூட்டுறவு நெசவாளர்களுக்கு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நெசவு தளவாடங்களை வீட்டிற்குள்ளே அமைத்திட ஏதுவாக வீடுகளை அமைத்துக்கொள்ளுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், இத்திட்டத்தின் கீழ் கடந்த 2011-12-ம் நிதியாண்டில் இருந்து, நடப்பு நிதியாண்டு வரை 8 ஊராட்சி ஒன்றியத்திலும் மொத்தம் 5 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு ரூ.87 கோடியே 54 லட்ச மதிப்பில் பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

அத்துடன், 285 நெசவாளர்களுக்கு மொத்தம் ரூ.6 கோடியே 55 லட்சத்து 50 ஆயிரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story