மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்னை ஆட்சி செய்ய பா.ஜனதா விடவில்லை சட்டசபையில் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு + "||" + In Karnataka To rule me BJP did not leave Kumaraswamy in the assembly Sensational charge

கர்நாடகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்னை ஆட்சி செய்ய பா.ஜனதா விடவில்லை சட்டசபையில் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது என்னை ஆட்சி செய்ய பா.ஜனதா விடவில்லை சட்டசபையில் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
என்னை ஆட்சி செய்ய பா.ஜனதா விடவில்லை என்றும், கர்நாடகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் சட்டசபையில் குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.
பெங்களூரு,

கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

கூட்டம் தொடங்கியதும் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், “சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் குழப்பம் இருப்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து சட்ட ஆலோசனை கேட்டு பெற்றுள்ளேன். அதை படித்து பார்த்த பிறகு, இன்று (அதாவது நேற்று) மாலைக்குள் உத்தரவு பிறப்பிக்கிறேன்“ என்றார்.


அதன் பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீது விவாதம் தொடங்கியது. அதில் முதல்-மந்திரி குமாரசாமி பேசியதாவது:-

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவலை தடுக்கும் நோக்கத்தில் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. நான் முதல் முறையாக 1996-ம் ஆண்டு எம்.பி. ஆனேன். அப்போது திடீரென அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட்டேன். அதன் பிறகு 2004-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனேன். அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால், காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தின.

கூட்டணியில் பிரச்சினை ஏற்பட்டதால், சட்டசபையை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகும்படி தேவேகவுடா கூறினார். ஆனால் எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்தலை விரும்பவில்லை என்று கூறினர். இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தோம். நான் முதல்-மந்திரி ஆனேன். கூட்டணி அமைக்க எடியூரப்பா தான் முதலில் வந்து கூறினார்.

கடந்த 12 ஆண்டு கர்நாடக அரசியல் மற்றும் ஆட்சியில் எனது பங்கும் சிறிதளவு இருக்கிறது. எடியூரப்பா தற்போது மவுனமாக, அமைதி பிரியராக காட்சி அளிக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரிய கட்சியாக உருவெடுத்ததால் பா.ஜனதா ஆட்சிக்கு கவர்னர் அனுமதி வழங்கினார். எடியூரப்பா முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.

முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க நான் தயாராக இருக்கிறேன். கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை நடைபெற்ற பா.ஜனதா ஆட்சியில் என்னென்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 5 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு வழங்கினர். ஆட்சி அமைந்து ஒரே மாதத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் என்னிடம் வந்து, புதிய ஆட்சி அமைக்கலாம் என்று கூறினர். அதற்கு நான் உடனே ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த கூட்டணி அரசு அமைந்து 14 மாதங்கள் ஆகிறது. கட்சி தாவல் தடை சட்டத்தில் சிக்காமல் இப்போது கட்சி தாவும் புதிய வழியை கண்டுபிடித்துள்ளனர். இவற்றை தடுக்க அந்த சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். 2008-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, என்ன கஷ்டத்தை அனுபவித்தாரோ அதே போன்ற கஷ்டத்தை நான் தற்போது அனுபவிக்கிறேன்.

1985-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400 இடங்களில் வெற்றி பெற்றது. ராஜீவ்காந்தி பிரதமராக பதவி ஏற்றார். அவர் மீது போபர்ஸ் ஊழல் புகார் எழுந்தது. அந்த புகாரில் இருந்து அவர் விடுதலையானார். ஆனால் அதன் பிறகு காங்கிரசுக்கு என்ன நிலை ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். இது தற்போதைய வரலாறு.

இப்போதும் எனக்கு முதல்-மந்திரி ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு அரசியலில் இருந்தே ஓய்வு பெற்றவிடலாம், அரசியலே வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் காங்கிரசார் எங்களிடம் வந்து, நீங்கள் முதல்-மந்திரியாக வேண்டும் என்று கூறினர். அதனால் நான் முதல்-மந்திரி பதவியை ஏற்றேன். நான் சூழ்நிலை சந்தர்ப்பத்தால் முதல்-மந்திரி ஆனேன் என்று தொடக்கத்திலேயே கூறினேன். அதை வைத்து பா.ஜனதாவினர் குறை கூறினர்.

ஆட்சி, அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. நாங்கள் யாருக்கும் மோசம் செய்யவில்லை. எங்களின் 15 எம்.எல்.ஏ.க்களை அழைத்துச் சென்று உங்களின் (பா.ஜனதா) கட்டுப்பாட்டில் வைத்துள்ளர்கள். அவர்களை அழைத்து வருவது என்பது சாத்தியமில்லை. நான் விதியால் முதல்-மந்திரியானேன். எனக்கு ஏன் இந்த பதவி கிடைத்தது என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டதும் உண்டு.

நீங்கள் (பா.ஜனதா) எத்தனை நாட்கள் ஆட்சி செய்கிறீர்கள் என்பதை பார்க்கிறேன். எனது சகோதரர் (மந்திரி எச்.டி.ரேவண்ணா) கோவிலுக்கு செல்வதை பா.ஜனதா வினர் குறை சொல்கிறார்கள். நீங்கள் ராமர் பெயரில் அரசியல் செய்கிறீர்கள். அதன் பேரில் ஆட்சிக்கு வந்தீர்கள். மந்திரி எச்.டி.ரேவண்ணா மாட-மந்திரத்தால் செய்வதாக பா.ஜனதாவினர் குறை சொல்கிறார்கள். மாட-மந்திரத்தால் ஆட்சி பாதுகாக்க முடியும் என்றால், மக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லையே.

எங்கள் குடும்பத்திற்கு கடவுள் பக்தி அதிகம் உண்டு. நாங்கள் கடவுளை நம்புகிறோம். பூஜை செய்கிறோம். கடவுளுக்கு பயப்படுகிறோம். ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் துரோகம் செய்யக்கூடாது. ஜனநாயகம், அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்காக தான் நாம் உள்ளோம். 1999-ம் ஆண்டு பிரதமராக இருந்த வாஜ்பாய், நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது, 10 நாட்கள் விவாதம் நடைபெற்றது. தற்போது கர்நாடகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக என்னை ஆட்சி செய்ய பா.ஜனதா விடவில்லை. தற்போது அவர்கள் 7-வது முறையாக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை