லால்குடி அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நிலமும் மீட்பு


லால்குடி அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடித்து அகற்றம் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நிலமும் மீட்பு
x
தினத்தந்தி 20 July 2019 4:38 AM IST (Updated: 20 July 2019 4:38 AM IST)
t-max-icont-min-icon

லால்குடி அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுமார் 15 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் 10 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்ட நிலமும் மீட்கப்பட்டது.

லால்குடி,

லால்குடியை அடுத்த குமுளூர் கிராமத்தில் ரெட்டிமாங்குடி, தச்சன்குறிச்சி பகுதிகளில் ஓடைகள், வரத்து வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அதில் வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மேலும் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கரும்பு, நெல், தென்னை, மா போன்ற விவசாயம் செய்யப்பட்டிருந்தன.

இந்தநிலையில் நீர்நிலை புறம்போக்குகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில், குமுளூர் கிராமத்தை சேர்ந்த விசுவநாதன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, நீர்நிலைகளுக்கான நிலங்களை மீட்க உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து குமுளூர் ஊராட்சிக்கு சொந்தமான நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றும் பணி புள்ளம்பாடி மண்டல துணை தாசில்தார் சசிகலா, ஒன்றிய ஆணையாளர் ரேவதி, வருவாய் ஆய்வாளர் அப்துல்கரீம் ஆகியோர் முன்னிலையில்நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அப்போது, ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. விவசாயம் செய்யப்பட்டிருந்த கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும், தென்னை, மா போன்ற மரங்களும் அழிக்கப்பட்டு 10 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டதால், வீடுகளை இழந்த குடும்பத்தினர், உடனடியாக மாற்று இடம் வழங்க வலியுறுத்தினர். முன்னதாக ஆக்கிரமிப்பு நிலங்களில் தென்னை, மா, கரும்பு விவசாயம் செய்த விவசாயிகள் 6 மாதம் அவகாசம் கேட்டு முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஊராட்சியை சுற்றியுள்ள ஏரி, நீர்வழி புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story