பிரியங்கா காந்தி கைதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட பழங்குடியின விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்வதற்கு சென்ற காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், உத்தரபிரதேச மாநில பொறுப்பாளருமான பிரியங்கா காந்தியை அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சேலம் பழைய பஸ்நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, ஷேக் இமாம், கிருஷ்ணசாமி, பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் பச்சப்பட்டி பழனிசாமி, நிர்வாகிகள் சிவக்குமார், சாந்தமூர்த்தி உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், பிரியங்கா காந்தியை கைது செய்த உத்தரபிரதேச மாநில போலீசாரை கண்டித்தும், மத்திய பா.ஜனதா அரசுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் நிருபர்களிடம் கூறுகையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மீது கொடூரமாக தாக்குதல் சம்பவம் நடந்தது. இதுபற்றி கேள்விப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்கு சென்றார். ஆனால் அவருக்கு அனுமதி அளிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினருடன் இணைந்து அவர் சாலை மறியலில் ஈடுபட்டார். இதற்காக அவரை அம்மாநில போலீசார் கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம், என்றார்.
Related Tags :
Next Story