பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 12:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து காரில் கடத்தி வந்த ரூ.1¼ லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை தேனி போலீசார் பறிமுதல் செய்தனர். அதையொட்டி கேரளாவை சேர்ந்த டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தேனி,

தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் போலீசார் தேனி- பெரியகுளம் சாலையில் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலையில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட ஒரு காரை மறித்து சோதனை செய்தனர்.

அந்த காருக்குள் பண்டல், பண்டல்களாக புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் ஆகும். இதையடுத்து அந்த காரையும், புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 27 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து காரில் வந்த டிரைவர் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரை ஓட்டி வந்தது கேரள மாநிலம், குமுளி அருகே உள்ள ரோசாப்புகண்டம் பகுதியை சேர்ந்த ஜலாவுதீன் (வயது 52) என்பதும், அவருடன் வந்தவர் கம்பம் புதுப்பள்ளிவாசல் தெருவை சேர்ந்த ராஜாமுகமது (33) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் பெங்களூருவில் இந்த புகையிலை பொருட் களை வாங்கி தேனி வழியாக அவற்றை குமுளி ரோசாப்புகண்டம் பகுதியில் ஒரு கடைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால், செல்லும் வழியில் போலீஸ் சோதனையில் சிக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜலாவுதீன், ராஜாமுகமது ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story