திருவாரூர் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்


திருவாரூர் அருகே ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 21 July 2019 4:30 AM IST (Updated: 21 July 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே அரை லிட்டர் மண்எண்ணெய் வழங்கியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மூலம் சுமார் 800 குடும்பங்களுக்கு அரிசி, மண்எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் நேற்று வழங்கப்பட்டன. மண்எண்ணெய் 1½ லிட்டர் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் நேற்று ஒவ்வொருவருக்கும் அரை லிட்டர் மட்டுமே மண்எண்ணெய் வழங்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மண்எண்ணெய் கேனுடன் ரேஷன்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீண்ட நாட்களாக ரேஷன் கடையில் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை. குறிப்பாக உளுந்து, துவரம்பருப்பு, சர்க்கரை, அரிசி போன்றவைகள் அளவை குறைத்து வழங்குவதாக கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அனைவருக்கும் உரிய அனைத்து பொருட்களும் தட்டுப்பாடின்றி போதிய அளவு வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அனைத்து பொருட்களும் தேவைக்கு ஏற்ப வழங்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story