அதிக மின்கட்டணத்தை தவிர்க்க மாடியில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை


அதிக மின்கட்டணத்தை தவிர்க்க மாடியில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
x

மின்கட்டணம் அதிகமாகிறது என மாடியில் தூங்கிய தனியார் நிறுவன ஊழியரின் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை, பெசில் கார்டன், 3-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணய்யா(48), தனியார் கட்டுமான நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சந்திரகலா. நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணய்யா வீட்டை பூட்டி விட்டு மாடியில் உள்ள சிறிய அறையில் குடும்பத்தினருடன் படுத்திருந்தார். நேற்று அதிகாலையில் கிருஷ்ணய்யா எழுந்து வெளியே வர முயன்றபோது கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் தனது நண்பருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்து வெளிப்புறமாக பூட்டியிருந்த தாழ்ப்பாளை திறந்து விட்டார் கீழே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 35 பவுன் நகை, எல்.இ.டி. டிவி, பணம் சேர்த்து வைத்த 2 உண்டியல்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு போரூர் உதவி கமிஷனர் செம்பேடு பாபு, இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் வீட்டில் ஏ.சி. உபயோகப்படுத்தியதால் மின்கட்டணம் அதிகமாக வந்ததாகவும், அதிக மின்கட்டணத்தை தவிர்க்க வீட்டின் மாடியில் உள்ள சிறிய அறையில் மின்விசிறியை மட்டும் பயன்படுத்தி தூங்கியதும் தெரியவந்தது. இதை கண்காணித்த கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story