காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் விரைவு சேவை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு


காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் விரைவு சேவை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஏற்பாடு
x
தினத்தந்தி 20 July 2019 10:16 PM GMT (Updated: 20 July 2019 10:16 PM GMT)

காஞ்சீபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் விரைவு சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த விரைவு சேவை மூலம் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்கலாம்.

காஞ்சீபுரம்,

புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 20-வது நாளான நேற்று அத்திவரதர், ஆரஞ்சு நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சனிக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

நேற்று அதிகாலை 4 மணிக்கே இலவச தரிசனத்தில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். நீண்ட வரிசையில் நின்று அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்றும் நெரிசல் காரணமாக ஒரு சிலர் மயக்கம் அடைந்தனர். கோவில் பின்புறத்தில் முறையான சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர்.

காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் போலீசாருடன் கோவிலுக்கு சென்று பக்தர்களை வரிசைபடுத்தி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார். பக்தர்களுக்கு குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க விரைவு சேவை குறித்து காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த நாட்களில் ‘டோனர் பாஸ்’ வைத்திருப்பவர்கள் முக்கிய நபர்கள் செல்லும் வரிசையில் சென்று அத்திவரதரை தரிசித்து வந்தனர். இனி மேல் ‘டோனர் பாஸ்’ வைத்திருப்பவர்கள் மாலை 6 மணி வரை மட்டுமே தரிசனம் செய்ய முடியும். மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை விரைவு தரிசன சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இணையதளத்தில் ரூ.300 செலுத்தி அனுமதிசீட்டு பெற வேண்டும். இதன் மூலம் அத்திவரதரை விரைவில் தரிசிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

அத்திவரதரை நேற்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், நடிகை ஊர்வசி உள்பட பலர் தரிசித்தனர்.

கடந்த சில நாட்களாக அத்திவரதரை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் திரண்டனர். நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர். நேற்று சனிக்கிழமை அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட நிர்வாகம் முதியோர், உடல் நலம் குன்றியோர், பச்சிளம் குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

இந்த நிலையில் நேற்று மாலை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.

Next Story