மேட்டூர் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


மேட்டூர் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 21 July 2019 11:00 PM GMT (Updated: 21 July 2019 5:06 PM GMT)

‘ரூ.565 கோடியில் திட்டம் தயாரித்து மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடி, 

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

எடப்பாடியில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு தேவையான நவீன கருவிகளை வழங்கி, மருத்துவமனையை மேலும் சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று எடப்பாடி மக்கள் ஏற்கனவே என்னிடம் கோரிக்கை வைத்தீர்கள். அதனை ஏற்று, நவீன கருவிகள் வாங்குவதற்கு ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரத்த சேமிப்பு வங்கி, ரத்த சுத்திகரிப்பு, எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை செய்ய தியேட்டர் மற்றும் ஜெனரேட்டர், 50 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடம் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். இதனால் எடப்பாடி அரசு மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு அரசால் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான கோடி மதிப்பீட்டில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் படிக்கிற காலத்தில் இப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் கிடையாது. பள்ளிக்கு செல்வதற்கு கூட சாலை வசதிகள் கிடையாது. ஆனால் இன்றைய தினம் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றது.

இன்றைக்கு கல்வி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. ஆகவே தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்கின்றது என்பதை சொல்லமுடியும். விலையில்லா மடிக்கணினி பெறும் மாணவ, மாணவிகள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது அறிவுத் திறனையும், பொது அறிவையும் பெருக்கிக்கொண்டு, எதிர்காலத்தில் எத்தனை போட்டி தேர்வுகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

எடப்பாடியில் நடக்கும் இன்றைய விழாவில் 78 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 4 அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 21,493 மாணவ, மாணவிகளுக்கு ரூ.26 கோடியே 37 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப் படுகிறது.

பள்ளிகளில் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்க பல்வேறு வசதிகள் கொடுக்கப்பட்டு கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து தமிழ்நாடு கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் 76 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இதுதவிர, பாலிடெக்னிக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மை கல்லூரி, ஐ.டி.ஐ கல்லூரி என ஏராளமான கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டதன் மூலம் கிராமத்திலிருந்து நகரம் வரையுள்ள ஏழை மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் சிறந்த கல்வி கற்பதற்கான வாய்ப்பை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவாக்கி கொடுத்துள்ளார்.

எடப்பாடி மக்கள் கோரிக்கையை ஏற்று ஏற்கனவே புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வனவாசியில் புதிய பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டு, நம்முடைய சுற்றுவட்டார பகுதியில் இருக்கின்ற ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் இன்றைக்கு அந்த கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இதுபோல், பி.எட். கல்லூரி எட்டிக்குட்டைமேட்டில் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் மேட்டூரில் இருந்து வெளியேறிய உபரிநீர் கடலில் வீணாக கலந்தது. இனிமேல் ஒருசொட்டு நீர் கூட வீணாகாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூரில் இருந்து வெளியேறும் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.565 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரிகளில் இந்த உபரிநீரை கொண்டு சென்று விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்தப்படும். விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு செயல்படும் இந்த அரசுக்கு விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக எடப்பாடி நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.32.40 லட்சம் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 18 பேட்டரி வண்டிகளை நகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். மேலும், ரூ.91.61 லட்சம் மதிப்பில் கொங்கணாபுரம் புதிய போலீஸ் நிலையம் கட்டும் பணி உள்பட ஏராளமான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதுதவிர, பல்வேறு துறைகள் மூலம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப் பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் ராமன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, வெங்கடாசலம், ராஜா, வெற்றிவேல், மனோன்மணி, மருதமுத்து, சின்னதம்பி, மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எடப்பாடி நகரமன்ற முன்னாள் தலைவர் கதிரேசன், துணைத்தலைவர் ராமன், ஆவின் தலைவர் ஜெயராமன், பூலாம்பட்டி முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் கரட்டூர் மணி, மாதேஸ், மாவட்ட முன்னாள் கவுன்சிலர்கள் மாதேஸ்வரன், ராஜேந்திரன், மாவட்ட முன்னாள் திட்ட குழு உறுப்பினர் முருகன், மேட்டூர் நகர அ.தி.மு.க.செயலாளர் என்.சந்திரசேகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story