பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்ற 3 பேர் மீது வழக்கு


பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகில் ஏற்றிச் சென்ற 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 July 2019 10:15 PM GMT (Updated: 21 July 2019 6:42 PM GMT)

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா பயணிகளை அழைத்துச்சென்ற 3 பேர் மீது திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

பொன்னேரி,

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரி 15,367 ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்குகின்றது. இங்கு ஏரியும், கடலும் கலக்கும் இடமான முகத்துவாரம் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. இந்த பகுதியில் பறவைகள் சரணாலயம் உள்ளதால் வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குவியும். இவற்றை காண்பதற்காக சுற்றுலா பயணிகள் படகில் சென்று மகிழ்வர். இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதம் படகு சவாரி செய்தபோது முகத்துவாரத்தில் படகு கவிழ்ந்து 22 பேர் பலியானார்கள்.

இதனையடுத்து பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடை விதித்திருந்தனர். இதனை மீறி படகு சவாரி செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த மே மாதம் தடையை மீறி படகு சவாரிக்கு சென்ற சுற்றுலா பயணியான மேரிஜான் படகுகள் மோதி ஏரியில் மூழ்கி பலியானார். இதனைதொடர்ந்து பழவேற்காடு ஏரியில் தடையை மீறி யாரேனும் படகு சவாரி செய்கிறார்களா? என்று காவல்துறையினர் கண்காணித்து வந்ததுடன் துண்டுபிரசுரங்கள் வழங்கி வந்தனர்.

போலீசாரின் எச்சரிக்கையை மீறி பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகளை படகுகளில் ஏற்றி செல்வதாகவும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு புகார்கள் அனுப்பினர்.

அவரது உத்தரவின் பேரில் பொன்னேரி வருவாய் ஆர்.டி.ஓ. நந்தகுமார், தாசில்தார் எட்வர்ட்வில்சன், துணை தாசில்தார்கள் செல்வகுமார், மதிவாணன், பாலாஜி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் பழவேற்காடு ஏரியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 3 படகுகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை செய்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் திருப்பாலைவனம் போலீசில் புகார் செய்தார். அதில் தடையை மீறி கோட்டைகுப்பம் பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 40), சிக்கந்தர் (35), ஆண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த இளையராஜா (32) ஆகியோர் சட்டத்திற்கு புறம்பாக சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் செந்தில், சிக்கந்தர், இளையராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story