தென்னிலை அருகே பெண் கத்தியால் குத்திக்கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


தென்னிலை அருகே பெண் கத்தியால் குத்திக்கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 July 2019 4:30 AM IST (Updated: 22 July 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

தென்னிலை அருகே இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், தென்னிலை அருகே உள்ள ராக்கியம் கவுண்டன்வலசுவில் நேற்று காலை சாலையோரம் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் தென்னிலை கிராமநிர்வாக அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து அவர் தென்னிலை போலீசாருக்கு தகவல் கூறினார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு இருந்தது. மர்ம நபர்கள் அவரை கொலைசெய்து சாலையோரத்தில் போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

இதையடுத்து, போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தென்னிலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர். கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அந்த பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story