வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதி; போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 21 July 2019 10:45 PM GMT (Updated: 21 July 2019 8:23 PM GMT)

வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதியை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை 1958-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. அணை பயன்பாட்டிற்கு வந்தபோது அங்கு புறக்காவல் நிலையம் தொடங்கப்பட்டது. 54 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2012-ம் ஆண்டு வைகை அணை புறக்காவல் நிலையம் போலீஸ் நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னரும் வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அங்கு பெறப்படும் புகார்களுக்கான முதல் தகவல் அறிக்கை ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனால் வைகை அணை போலீசாருக்கும், புகார்தாரர்களுக் கும் வீண் அலைச்சல் ஏற்பட்டு வந்தது.

வைகை அணை போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கை குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் வைகை அணை போலீஸ் நிலையத்திற்கு வரும் புகார்களுக்கு அங்கேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து நேற்று முதல் வைகை அணை போலீஸ் நிலையத்திலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வசதி தொடங்கியது.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று வந்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணதெய்வேந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இனிவரும் காலங்களில் வைகை அணை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருந்து வரும் புகார்களுக்கு வைகை அணை போலீஸ் நிலையத்திலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நேரடியாக ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் போலீசாரின் பணிச்சுமையும், புகார்தாரர்களின் வீண்அலைச்சலும் குறைய வாய்ப்பு உள்ளது.

Next Story