‘அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை’ தங்கதமிழ்செல்வன் பேச்சு
அ.ம.மு.க.வை மக்கள் ரசிக்கவில்லை என்று தி.மு.க.வில் இணைந்த தங்கதமிழ்செல்வன் பேசினார்.
தேனி,
தேனியை அடுத்துள்ள வீரபாண்டியில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில், மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது கூட்டத்துக்கு வந்திருந்த கட்சியினரை பார்த்து அவர் கையசைத்தார். இந்த கூட்டத்தில் அ.ம.மு.க.வில் இருந்து சமீபத்தில் தி.மு.க.வில் இணைந்த தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:–
அ.தி.மு.க.வில் நான் இருந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் 6 ஆயிரம் வாக்குகளில் என்னை தோற்கடித்தார்கள். ஜெயலலிதா இறந்தபிறகு, இந்த ஆட்சி ஊழல் ஆட்சி என்று நாங்கள் வெளியே வந்தோம். பின்னர் ஒரு கட்சியில் பயணித்தோம். டி.டி.வி.தினகரன் நடத்தும் அந்த கட்சியை (அ.ம.மு.க.) மக்கள் விரும்பவில்லை; ரசிக்கவில்லை. செத்த பாம்பை அடிக்கக்கூடாது என்று நினைக்கிறேன். இதனால், அதை பற்றி பேசுவது தவறு.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 1952–ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் தேர்தல் செலவு ரூ.143 கோடி. தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரூ.550 கோடியை செலவு செய்து வெற்றி பெற்றுள்ளார்.
மு.க.ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதல்–அமைச்சர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். எனக்கு சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ எந்த பதவியும் வேண்டாம். ஆட்சிக்கு வந்ததும், போலீஸ்துறையை மட்டும் ஒரு மாதம் என்னிடம் கொடுங்கள். அந்த துறையை என்னிடம் கொடுத்தால் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்திடம் இருந்து ஒரு ஆண்டு தமிழக பட்ஜெட்டுக்கு தேவையான ரூ.3 லட்சம் கோடியை நான் எடுத்துக் கொடுக்கிறேன். அ.தி.மு.க. அமைச்சர்களிடம் இருந்து ஆண்டு தோறும் ரூ.1 லட்சம் கோடியை நான் எடுத்துத் தருகிறேன். நீங்கள் எடுத்து மக்களுக்கான திட்டங்களை கொடுங்கள்.
தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ் கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும். நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேனி மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் தி.மு.க. தான் ஜெயிக்கும். உள்ளாட்சி தேர்தலிலும் 100 சதவீதம் தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.